search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மாணவி"

    ‘உலக தலைவர்கள் மீது இளம் தலைமுறையினர் கோபமாக இருக்கிறார்கள்’ என கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கர் பேசினார்.
    கிளாஸ்கோ:

    பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பருவநிலை மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமா சங்கர் பங்கேற்றார். திருவண்ணாமலையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான வினிஷா உமாசங்கர் சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கினார்.

    ரூ.40 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியால் கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகள் வழங்கப்பட்டன.

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு எர்த்ஷாட் என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விருது இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர். இதற்கிடையேதான் இளவரசர் வில்லியமின் அழைப்பை ஏற்று பருவநிலை மாற்ற மாநாட்டில் வினிஷா உமாசங்கர் பங்கேற்று பேசினார். அவர் மாநாட்டில் சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை பற்றி விவாதிக்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசியதாவது:-

    நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்படத் தொடங்க வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் (உலக தலைவர்கள்) ஆதரிக்க வேண்டும்.

    பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவை. எனவே எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

    எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன். எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ஆனால் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் வழி நடத்துவோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம்.

    ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று.

    வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற தவறிய தலைவர்கள் மீது எனது தலைமுறையினரில் பலர் கோபமாகவும், விரக்தியாகவும் உள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் கோபப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.

    நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல. நான் பூமியில் இருந்து வந்த சிறுமி. நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். மிக முக்கியமாக நான் ஒரு நம்பிக்கையாளர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சத்தியமங்கலம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலை தூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள்.

    ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016-ம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

    டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

    தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Student #commitsuicide
    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவியின் உடல் இன்று அதிகாலை சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவரது மகள் ஸ்ரீமதி (20).

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முடித்த மாணவி ஸ்ரீமதிக்கு கலெக்டர் ஆக விருப்பம் ஏற்பட்டது. மகளின் ஆசையை நிறைவேற்ற அவரது தந்தையும் அவரை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார்.

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதி தனது அறையில் தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். உடன் இருந்த நெல்லை மாணவி தன் தோழி தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    போலீசார் மாணவி ஸ்ரீமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தற்கொலை செய்தி சத்தியமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிககப்பட்டது. கதறி அழுதபடி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அங்குள்ள மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பெற்றோர் மற்றும் தனது தம்பி வருண்ஸ்ரீ மீது அதிக பாசம் கொண்ட ஸ்ரீமதிக்கு அவர்களை பிரிந்து தனியாக இருக்க முடியவில்லை. மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிப்பிலும் அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மாணவியின் உடல் சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு வந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்களும் ஊர்மக்களும் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    ஸ்ரீமதி தற்கொலை செய்வதற்கு முன் பெற்றோருக்கு போன் செய்து உள்ளார். ‘‘தீபாவளிக்கு ஊருக்கு வருகிறேன்’’ என்று கூறினார்.

    அவரது உயிரற்ற உடலைப்பார்த்த உறவினர்கள் ‘‘தீபாவளிக்கு வருவேன் என்று சொன்னீயே இப்போது பிணமாக வந்துள்ளாயே’’ என்று கூறி கதறி அழுதனர். அவரது தந்தை ‘‘நீ ஆசைப்பட்டபடிதானே அம்மா ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தேன். இப்படி பார்க்கவா டெல்லிக்கு அனுப்பினேன்’’ என்று கதறி துடித்தார்.

    இந்த உருக்கமான காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமக்கியது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அப்பகுதியில் மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Student #commitsuicide
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.

    இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார். ஸ்ரீமதி டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ் படித்து வந்தார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர்போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



    பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

    எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Student #commitsuicide
    நீட் தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் அகில இந்திய அளவில் பீகார் மாணவி கல்பனா குமாரி முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 12-ம் இடத்தை பிடித்தார். #NeetResult #NEETResult2018 #NEETexam
    சென்னை:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

    cbs-e-r-esults.nic.in,

    www.cbs-e-n-eet.nic.in,

    www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியானது.

    ‘நீட்’ தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேரும், பெண்கள் 4 லட்சத்து 2 ஆயிரத்து 162 பேரும், திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர். ஆதிதிராவிடர்கள் 87 ஆயிரத்து 311 பேர். பழங்குடியினர் 31 ஆயிரத்து 360 பேர். பொதுப்பிரிவினர் 2 லட்சத்து 68 ஆயிரத்து 316 பேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதியதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    பொதுப்பிரிவினருக்கு 119 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் பிரிவினருக்கு 96 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் ஆகும்.

    இந்தியாவில் நீட் தேர்வில் கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தை ரோகன் புரோகித் என்ற மாணவர் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவர் 690 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 3-ம் இடத்தை டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷு சர்மா என்ற மாணவர் பிடித்துள்ளார்.

    ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரேங்க் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் மாணவர்களே அதிகம் பேர் இடம்பெற்று உள்ளனர். முதல் 50 இடங்களில் 8 இடங்களை டெல்லி கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக குஜராத் 7 இடங்களையும், ஆந்திரா 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் 518 பேர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் எழுதினார்கள். இதில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 39.56 ஆகும்.

    புதுச்சேரியில் இருந்து 4 ஆயிரத்து 573 பேர் விண்ணப்பித்தனர். 4 ஆயிரத்து 462 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1,768 பேர் தகுதி பெற்றனர். இது 39.62 சதவீதம் ஆகும்.

    சென்னை மாணவி கே.கீர்த்தனா தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 12-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்கள் 676.

    மருத்துவ படிப்புக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போய்விடும். 85 சதவீத இடங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தும். மேலும் விவரங்களுக்கு www.mcc.nic.in எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். #NeetResult #NEETResult2018 #NEETexam
    கடின உழைப்புடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்று நீட் தேர்வில் இந்தியாவிலேயே 12-வது இடத்தை பிடித்த தமிழக மாணவி கீர்த்தனா கூறியுள்ளார். #NEETExam #Keerthana
    சென்னை:

    ‘நீட்’ தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தமிழகத்தில் முதல் இடமும், அகில இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் சென்னை கே.கே.நகரில் உள்ள பி.எஸ்.பி.பி. பள்ளியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தேன். 11-ம் வகுப்பு முதல் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். உயிரியல் பாடத்தை நன்றாக படிக்கவேண்டும். அதை மறந்துவிடாமல் அடிக்கடி படித்தேன். இந்தநிலையில் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12-ம் இடமும், தமிழகத்திலேயே முதலிடமும் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    நீட் தேர்வு என்பது கஷ்டமும் அல்ல, எளிதும் அல்ல. பயிற்சி மையத்துக்கு போகாமலேயே மாணவர்கள் சாதிக்க முடியும். அதற்கு அவர்கள் கடினமாக உழைக்கவேண்டும். படிப்பதற்காக தனி கால அட்டவணை தயாரித்து கடின உழைப்புடன் படித்தால் வெற்றி நிச்சயம்.

    எனது நண்பர்கள் பலர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் அகில இந்திய அளவில் 100 மற்றும் 200 இடங்களை பெற்றுள்ளனர்.

    நான் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் நடத்திய தேர்வுகளை எழுதியுள்ளேன். அந்த முடிவு வந்தபிறகு தான் எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்? என்று முடிவு செய்ய இருக்கிறேன். எனது தந்தை காசி, தாய் கவிதா லட்சுமி ஆகிய இருவருமே டாக்டர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×